பிரதமர் பதவி வேண்டும் என்று ராஜபக்சக்களிடம் மலர்த் தட்டை தான் ஏந்திச் செல்லவில்லையாம் – ரணிலுக்குச் சஜித் இப்படி பதிலடி.

பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கத் தான் ராஜபக்சக்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துபூர்வமாக பகிரங்கமாகத் தனது பதிலைத் தெரிவித்தார் எனவும், இது கட்சியின் நாடாளுமன்றக் குழு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணிக் கட்சிகளின் கூட்டு உடன்பாடு மற்றும் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தான் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மாத்திரம் முன்வைத்து ஜனாதிபதி உண்மையான நிலைப்பாடுகளைத் திரிபுபடுத்தியுள்ளார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நிபந்தனைகளுடனையே உரிய கோரிக்கையை முன்வைத்தார் எனவும் குறிப்பிட்டார்

நிபந்தனையின்றி பட்டம், பதவி, சலுகைகளை ஏற்றுக்கொள்வதற்காகத் தான் ஒருபோதும் செயற்படவில்லை எனத் தெரிவித்த அவர், அவ்வாறான பதவி வெறி தனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கோ இல்லை எனவும் கூறினார்.

ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமும், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குத் தீவைத்த கீழ் தர நடவடிக்கையும் ஒன்றல்ல வேறுபட்டவை எனத் தெரிவித்த அவர், இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களுக்குத் தான் முற்றிலும் எதிரானவன் எனவும், ஜனநாயகப் போராட்டங்களுக்கு நிபந்தனையின்றி சார்பாக இருக்கின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய ராஜபக்சவுக்குத் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் வெளியிட்டார்.

அவையாவன:-

01. குறுகிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு இணக்கம் தெரிவித்தல்.

02. இரண்டு வார காலத்துக்குள் சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.

03. எம்மால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கச் செய்யும் வகையில் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்களுக்கமைய மிகக் குறுகிய காலத்துக்குள் சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தல்.

04. மக்களுடைய வாழ்க்கை முறையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதுடன், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்ட அரசமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்திய பின்னர் ஸ்தீரமான அரசை ஸ்தாபிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துதல்.

Leave A Reply

Your email address will not be published.