மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை.

சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம்.

மேலும் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று மாலை திறந்துவைத்தார்.

இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நேரு, தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.