உலக கோப்பை கால்பந்து போட்டி- கனடாவை பந்தாடியது குரோஷியா.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரோஷியா, கனடா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் கோல் அடித்தார். இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது ஆகும். 

எனினும் 36வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரேஜ் கிராமரிச் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 44வது நிமிடத்தில் மார்கோ லிவாஜா கோலை அடித்து குரோஷியாவை முன்னிலை பெறச் செய்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றிருந்தது.

2வது பாதி ஆட்டத்திலும் குரோஷியா அணி சிறப்பாக விளையாடியது. 70வது நிமிடத்தில் ஆண்ட்ரேஜ் கிராமரிச் 2வது கோலை அடித்தார். மேலும் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் 94வது நிமிடத்தில் குரோஷியா வீரர் லோவ்ரோ மேஜர் ஒரு கோல் அடிக்க அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் எப் பிரிவில் நான்கு புள்ளிகளுடன் குரோஷியா முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக பெல்ஜியத்திற்கு எதிரான கடைசி ஆட்டத்தில் டிரா செய்தாலே அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

Leave A Reply

Your email address will not be published.