நாட்டை விட்டுத் தப்ப முயன்ற 20 பேர் திருமலையில் கைது!

உள்ளூர் மீன்பிடிப் படகு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற 20 பேரைக் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, ஃபவுல் முனைக்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணும், மூன்று வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடல் வழி ஊடாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளைத் தடுப்பதற்காக, தீவின் கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாதுகாப்பற்ற கப்பல்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக குடியேற்ற முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ள கடற்படையினர், அவ்வாறான கடற்பயணங்களில் ஈடுபடவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.