ஆட்சி அதிகாரம் இல்லாமல் சேவை செய்து காட்டுங்கள்! – அரச தரப்பினருக்குச் சஜித் சவால்.

“முடிந்தால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்து காட்டுங்கள் என்று அரச தரப்பில் உள்ளவர்களுக்குச் சவால் விடுக்கின்றேன்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 42 ஆவது கட்டமாக 46 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் நேற்று (06) தெரணியகல சிறி சமன் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரபஞ்சம், மூச்சு போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது சஜித் பிரேமதாஸவுக்குப் பொருட்கள் பகிர்ந்தளிக்க மட்டுமே தெரியும் என்றும், அதற்கு மேல் எதுவும் தெரியாது என்றும் அரசில் உள்ள ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், இலங்கையின் 74 வருட அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி ஆற்றிய பாரம்பரிய வகிபாகத்துக்கு அப்பால் தற்போதைய எதிர்க்கட்சி வேறுபட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

கல்வி சார்ந்த அணுகலில் பாரபட்சம் நிலவக்கூடாது. எனவே, கிண்டல் செய்யும் அரச தரப்பினருக்கு ஆட்சி அதிகாரம் இன்றி சேவை செய்து காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.

42 பஸ்களையும் பரோபகாரிகளின் உதவியுடன் வழங்கியுள்ளோம். அவற்றுக்கு அரச நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

நாட்டின் உயிர் நாடியாகக் கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீகப் பொறுப்பாகும். அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காகக் கொண்டு சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 42 ஆவது கட்டமாக 46 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை சேவை பஸ்ஸை வழங்குகின்றோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.