வடக்கு, கிழக்கில் சனியன்று உறவுகள் பெரும் போராட்டம்!

“நாளைமறுதினம் (டிசம்பர் 10 ஆம் திகதி) சனிக்கிழமை சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் வடக்கு மாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களும் சேர்ந்து வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய அளவிலான பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் திருமதி சிவானந்தன் ஜெனிதா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கப்படும் பேரணியானது காந்தி பூங்காவைச் சென்றடையும் எனவும் ,

வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களும் ஒன்றுசேர்ந்து முன்னெடுக்கவுள்ள பேரணியானது வவுனியா மாவட்டத்தில் வவுனியா கந்தசுவாமி கோயில் முன்றலில் நாளைமறுதினம் காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியூடாக இலுப்பையடிக்கு சென்று தொடர்ந்து ஏ – 9 வீதியூடாக பழைய பஸ் நிலையத்தை வந்தடையும்.

மதகுருமார்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்கலைகழக மாணவர்கள், இளைஞர்கள் – யுவதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் , பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சியினர் என எல்லோரையும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.