‘பட்ஜட்’ மீது இன்று இறுதி வாக்ககெடுப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

அதன் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி திதல் 22 ஆம் திகதி வரையிலான 7 நாள்கள் இடம்பெற்றன.

22 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

இதில் அரசுடன் இணைந்து எதிரணியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்.பி.க்களான ஜீவன் தொண்டமான், மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரும், எதிரணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திஸாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜோன் செவிரத்ன ஆகியோரும் வாக்களித்தனர்.

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினர், விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் வாக்களித்தனர்.

அதேவேளை, எதிரணியில் உள்ள ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. எனினும், தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இருந்த போதும் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.