சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது ’20’ திருத்த வரைபு

அரசமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வரைபு நீதி அமைச்சின் செயலாளர் ஊடாக தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது எனச் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவரும் சட்டமூலத்துக்கான பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதனிடையே, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, நிபுணர் குழுவினால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையால் அவை குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இம்மாதம் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் அதை நிறைவேற்றவும் அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் அரசு கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைப் பலவீனப்படுத்தியுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு அரசு பிரயத்தனப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.