மதில் பாயும் ஆசிரியர் வளவாளரானது எப்படி? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி.

யாழ்ப்பாணம் வலய பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர் ஒருவரை தீவகப் பகுதியில் எவ்வாறு வளவாளராக நியமித்தீர்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் வட மாகாண கல்விப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார்.

ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளருடன் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரங்களில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகளை கல்வி அமைச்சுக்கு வழங்கியிருந்தோம்.

அந்த ஆசிரியர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் எவையும் இடம்பெறாத நிலையில் தீவக வலயத்திற்கு தமிழ் பாட வளவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகள் இல்லாத ஒருவர் ஒரு வலயத்தின் ஆசிரிய வளவாளராக நியமிப்பதற்கு அனுமதி வழங்கியது யார்?” – என்றார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், “பல ஆசிரியர்கள் பாடசாலையில் வெற்றிலை போடுகின்றனர் என்று எமக்கு பல முறைப்பாடுகள் வருகிறன. ஆசிரியர்களின் ஒழுக்கம் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள்தான் வழிப்படுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.