மிருசுவில் படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்., தென்மராட்சி, மிருசுவில் படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மிருசுவில் தேவாலயத்துக்கு முன்பாக நடைபெற்றது.

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா. கிசோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க. வாமதேவன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

போர் காரணமாக மிருசுவில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வடமராட்சி பகுதியில் வசித்து வந்தவர்களில் 9 பேர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த தமது வீடுகளைப் பார்வையிட கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி சென்ற வேளை அவர்களை இராணுவத்தினர் கைது செய்து சித்திரவதைகளுக்குள்ளாகி, 8 பேரை படுகொலை செய்து மலசலகூடக் குழிக்குள் வீசியிருந்தனர்.

அதன்போது காயங்களுடன் அங்கிருந்து பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் தப்பி வந்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

ஞானச்சந்திரன் , சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன் மற்றும் வில்வராஜா பிரசாத் ஆகிய 8 பேரே படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் 9 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி அன்று 4 இராணுவத்தினருக்கு எதிராகப் போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை என அவர்களை வழக்கில் இருந்து விடுவித்த மன்று , சுனில் ரத்நாயக்க என்பவரைக் குற்றவாளியாகக் கண்டு மரணதண்டனை தீர்ப்பளித்தது.

அந்நிலையில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , மரணதண்டனைக் கைதியான சுனில் ரத்நாயக்கவுக்குப் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.