தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுகூடலுக்குச் சம்பந்தன் வரவேற்பு!

“தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கதைத்தமை வரவேற்கத்தக்க விடயம். இது மகிழ்ச்சியான செய்தி. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம். இதனைவிட மேலதிகமாக எதையும் கூறி இந்த முயற்சியை நான் குழப்ப விரும்பவில்லை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர் நேற்றுமுன்தினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரின் நிலைப்பாட்டை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் தீர்வு, ஜனாதிபதியுடனான பேச்சு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறிந்தேன். இன்னும் பல விடயங்களை அவர்கள் கதைத்திருக்கக் கூடும்.

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளன. அதேவேளை ஜனாதிபதியுடனான பேச்சும் தமிழர் அபிலாஷைகளை வெல்லக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகப் போட்டியிடுவது அதிக நன்மை என்ற விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது பேச்சளவில் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் இது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பார்கள். ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்போம். இதனை விட மேலதிகமான கருத்துக்களை வெளியிட்டு குழப்ப விரும்பவில்லை” – என்றார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.