பருத்தித்துறை நகர சபை புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைப்பு.

யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 5 ஆம் திகதி அன்று பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட வேளை ஒரு மேலதிக வாக்கால் அது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி மீண்டு வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை சிறிது நேரம் முன்னராக தவிசாளர் யோ. இருதயராஜா தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தவிசாளர் இன்மை காரணமாக வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்று வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறுவதற்க்கான கூட்டம் கூட்டப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் உட்பட நால்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவருமாக ஐவர் சமூகமளித்திருந்தனர்.

இந்நிலையில், உள்ளூராட்சி ஆணையாளரால் மேலதிகமாக அரை மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது.
சற்று நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மதனி நெல்சன், சுயேட்சைச் குழு உறுப்பினர் துலோசனா ஆகியோர் சமூகமளித்தனர்.

அவ்வாறிருந்தும் 15 உறுப்பினர்களை கொண்ட குறித்த பருத்தித்துறை நகர சபையில் 8 பேர் கூட்டம் ஒன்றை நடத்துவதற்குக் சமூகமளிக்க வேண்டும். ஆனால், 7 பேர் மட்டுமே சமூகமளித்திருந்த நிலையில் ஒரு கோரம் இன்மையால் புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார். புதிய தவிசாளர் தெரிவுக்குப் பிறிதொரு திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறி கூட்டத்தை அவர் நிறைவு செய்தார்.

மேலும், இன்றைய தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அறுவரும், ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருவருமாக 8 பேர் சமூகமளிக்கவில்லை.

இதேவேளை, பருத்தித்துறை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் சேந்தன் தலைமையிலான பொலிஸார் நகர சபை கட்டடத்தில் இன்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.