எந்தவொரு தரப்புக்கும் பாதகம் இல்லாத அரசு தீர்வு! – அதுவே தனது இலக்கு என்கிறார் ரணில்.

“நாட்டு மக்களில் எந்தவொரு தரப்புக்கும் பாதகம் இல்லாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதுதான் எனது இலக்கு. தீர்வைக் காண்பதற்கான பேச்சுப் பயணம் இந்தப் புத்தாண்டில் வெற்றிகரமாக நடைபெறும் என்று நம்புகின்றேன். தீர்வு காணும் விடயத்தில் இயலாத்தன்மை வருமாயின் அதை எதிர்வரும் சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பேன். இதை மட்டுமே என்னால் இப்போது கூற முடியும்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசு ஆரம்பித்துள்ள சர்வகட்சி பேச்சு தொடர்பிலும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய பிரத்தியேக கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் இடம்பெறுகின்ற கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்கும் வகையில் குறிப்பிட்ட சில ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் வருவதுபோல், அரசு ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வைக் காண்பதற்கான சர்வகட்சி பேச்சு தொடர்பிலும் முரண்பட்ட தகவல்களை சில ஊடகங்கள் வெளியிடுகின்றன.

நாட்டு மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் பயணத்தில் இப்படியான ஆரோக்கியமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனக் குறிப்பிட்ட ஊடகங்களிடம் நான் வேண்டிக்கொள்கின்றேன்.

நாட்டு மக்களில் எந்தவொரு தரப்புக்கும் பாதகமில்லாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதுதான் எனது இலக்கு. இதை மட்டுமே என்னால் இப்போது கூற முடியும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக சர்வகட்சித் தலைவர்கள் தங்களுக்கு இடையில் ஒன்றுகூடி ஒரு தீர்க்கமான முடிவை விரைந்து எடுக்குமாறு கடந்த சந்திப்பில் கூறிவிட்டேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.