மாற்றத்துக்காகப் போராடியவர்கள் தேர்தலுக்கு உடனே தயாராகுங்கள் – சாணக்கியன் அறைகூவல்.

மாற்றத்துக்காகப் போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு உடனடியாகத் தயாராக வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய எல்லை நிர்ணயக் குழுவை சாணக்கியன் எம்.பி. இன்று சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாற்றத்தைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தற்போது ஜனநாயக ரீதியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே, அவர்கள் அனைவரும் ஆர்வமாக இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்.

அரசில் இருக்கும் ஒரு சிலர் தேர்தலுக்கு நிதி இல்லை எனச் சொல்லும் நொண்டி சாட்டுகள் தொடர்பில் கரிசனை செலுத்தாமல், அனைவரும் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்.

அதேபோன்று உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மேலும் பல விடயங்கள் தொடர்பில் நாம் பேசியிருந்தோம்.

குறிப்பாக வட்டாரங்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் வகையிலான சில செயற்பாடுகளை அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணைபோகும் வகையில் செயற்படுகின்றனர்.

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வட்டாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே ஒழிய குறைக்கப்பட்டக் கூடாது. இந்த விடயத்தை நாம் இன்று வலியுறுத்தியுள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.