மக்களின் அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதிக்கின்றது அரசு! – சஜித் குற்றச்சாட்டு.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சரவையும் மக்களின் வாக்குரிமையில் செல்வாக்குச் செலுத்துகின்றனர். அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 68 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று கதிர்காமம் ஜனாதிபதி மத்திய கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நேற்று (11) அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சாதி, மதம், குலம் மற்றும் கட்சி வேறுபாடின்றி அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட தற்போதைய அமைச்சரவையால் தடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்த அமைச்சரவை சட்டவிரோதமாகத் தீர்மானித்துள்ளது.

தற்போதைய நிறைவேற்று அதிகாரமும் அமைச்சரவையும் ஒன்றிணைந்து மக்களின் அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதிக்கின்றது.

இதனால், சமூகத்தில் எழுந்த சர்ச்சையால், அந்த முடிவை மாற்றிக் கொள்ள நேரிட்டாலும், இந்தத் தவறுக்காக அமைச்சரவை நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

நாம் இவ்வாறான விபரீதமான செயற்பாடுகளை மேற்கொள்ளாது, புதிய தொழிநுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இந்நாட்டின் ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களை வணங்கும் அடிமைக் கூட்டத்தையே இதுவரை உருவாக்க விரும்பினாலும், பிரபஞ்சம் திட்டத்தைச் செயற்படுத்துவதன் மூலம், படித்த தலைமுறை, ஸ்மார்ட் இளைஞர்கள் மற்றும் சிறந்த ஆளுமை கொண்ட குடிமக்கள் தலைமுறையை உருவாக்குவதே தற்போதைய எதிர்க்கட்சியின் நோக்கமாக இருக்கின்றது.

நாட்டையே தீக்கிரையாக்கும் தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு டொலர்கள் தேவை. அந்த டொலர்களைக் கொண்டு வரக்கூடியவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவது மக்களின் பொறுப்பு. இல்லை, முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பிரச்சினைகள் ஒருபோதும் தீர்க்கப்படாது.

மக்கள் கோரும் தீர்வை வழங்கும் திறன் நான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது.

யார் விமர்சித்தாலும்,யார் சேறுபூசினாலும் இந்தப் பிரபஞ்சம் திட்டத்தை நிறுத்த முடியாது. 250 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இதுவரை பஸ்களைக் கோரியுள்ளன. இந்த இலக்கு கடினமாக இருந்தாலும் எப்படியாவது எட்டுவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.