மக்கள் ஆணையுடன் புதிய ஆட்சி மலர வேண்டும்! – சர்வதேசத்தின் கோரிக்கை இதுவே என்கிறது சஜித் அணி.

“மக்கள் ஆணை இல்லாத ஆட்சியை வீழ்த்தி புதிய மக்கள் ஆணை உடைய ஆட்சி மலர வேண்டும் என்பதே உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் கோரிக்கையாகும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இப்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கிவிட்டதால் அதை நடத்த வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

உண்மையில் நாங்கள் விரும்புவது உள்ளூராட்சி சபைத் தேர்தலை அல்ல. உடனடி ஜனாதிபதித் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலையுமே நாங்கள் விரும்புகின்றோம்.

நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றால் தேவையற்ற செலவுகள் எல்லாம் குறைக்கப்பட வேண்டும். அமைச்சர்களின் வெளிநாட்டு சுற்றுலாக்கள் – விழாக்கள் ஏதும் குறையவில்லை. பெரும் காட்சியோடு – அதிகம் செலவழித்து 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படியான செலவு தேவை இல்லை. மக்களுக்கு மருந்துகள் இல்லை. உணவுத் தட்டுப்பாடு நிலவுகின்றது. பொருட்களின் விலைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்தநிலையில் இவ்வளவு பணம் செலவழித்து சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தேவையில்லை.

அந்தப் பணத்தை மருந்துப் பொருட்களுக்கும் வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். எம்மிடம் ஆட்சி கிடைத்தால் 3 வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சரியான பொருளாதாரத் திட்டம் எம்மிடம் இருக்கின்றது. சஜித் பிரேமதாஸ அதைச் சரியாகச் செய்வார். அவர் திருடர் அல்ல.

இந்தப் பக்கத்தால் கிடைக்கின்ற பணத்தை அந்தப் பக்கம் மக்களுக்காகச் செலவு செய்பவர். எதிர்க்கட்சியில்
இருந்துகொண்டே அவர் பல சேவைகளைச் செய்து வருகின்றார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.