ஹெரோயினுக்கு அடிமையான சகோதரனுக்குப் பணத்தைக் கொடுத்து 14 வயதுச் சிறுமி மீது துஷ்பிரயோகம்! – வன்னியில் அதிர்ச்சிச் சம்பவம்.

புதுக்குடியிருப்பு, மூக்கிலாறில் மெல்லக் கற்கும் சிறுமி ஒருவர் போதைப்பொருள் கொடுக்கப்பட்டுத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

14 வயதுச் சிறுமியே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது 19 வயதுச் சகோதரனுடைய நண்பர்களே சிறுமியைத் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையான 19 வயதுச் சகோதரன், நண்பர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளார் என்பதும், அந்தப் பணத்தை ஹெரோய்ன் நுகர்வதற்குப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெல்லக் கற்கும் மாணவியான இந்தச் சிறுமி, கடந்த 3 மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லவில்லை. அதையடுத்து சிறுவர் நன்னடத்தைசார் உத்தியோகத்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று ஆராய்ந்துள்ளனர். அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியைச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்காகச் சேர்ப்பித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், சிறுமி ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை கசிப்புக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. தாய் வீதி வேலைக்குச் செல்பவர். அதனால் பெரும்பாலான நேரங்களில் சிறுமி வீட்டில் தனித்திருப்பார். அதைச் சாதகமாகப் பயன்படுத்தியே சிறுமி 3 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியின் சகோதரன் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்ட நண்பர்கள் சகோரனுக்கு ஆயிரம் ரூபாவைக் கொடுத்து சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர். சிறுமிக்கு ஐஸ் போதைப்பொருளைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி, அதற்கு அடிமையாக்கியும் உள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.