“அநீதியான வரி விதிப்பை நிறுத்து!” – தென்கிழக்குப் பல்கலையில் போராட்டம்.

அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் பல்கலைகழக நுழைவாயிலில் நேற்று இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்த இந்தப் போராட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள பாரிய வரி விதிப்புக்கு எதிராகப் பல்வேறு சுலோகங்கள் ஏந்தியவாறு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது, “அநீதியான வரி விதிப்பை நிறுத்து”, “அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கின்றது”, “பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி; எங்களிடம் கேட்பது அநீதி” போன்ற பதாகைகளை ஏந்தியாவாறு விரிவுரையாளர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், அரசுக்கும் மக்களுக்கும் தங்களது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்திக் கருத்துக்களை வெளியிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.