சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க மாட்டோம்.

அமெரிக்காவின் மொடானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்தது. அது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. இதை சீனா மறுத்தது. அது உளவு பலூன் அல்ல என்றும் வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல், திசை மாறி அமெரிக்க வான் பரப்புக்குள் சென்று விட்டதாக சீனா விளக்கம் அளித்தது.

ஆனால் சீனாவின் விளக்கத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. இதற்கிடையே அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிக்கு மேலே ராட்சத பலூன் பறந்த போது, அதனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தி பலூனை சுட்டனர்.

இதற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே கடலில் விழுந்த ராட்சத பலூனின் சிதைவுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இரண்டு போர் கப்பல்கள் அனுப்பப்பட்டன. இந்த நிலையில் பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று அமெரிக்கா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறியதாவது:- கடல் மேற்பரப்பில் விழுந்த ராட்சத பலூனின் பாகங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. கடலுக்கு அடியில் சென்ற பலூன் சிதைவுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. வானிலை நிலவரம் காரணமாக அப்பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது

வரும் நாட்களில் கடலுக் கடியில் சென்று தேடுதல் பணி தொடங்கப்படும். கடலில் இருந்து மீட்கப்படும் பலூனின் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டமோ அல்லது எண்ணமோ எதுவும் இல்லை பலூனை சுட்டு வீழ்த்துதற்கு முன்பு பலூனை பற்றிய போதுமான முக்கிய தகவல்களை சேகரித்தோம். அந்த தகவலை பகுப்பாய்வு செய்து வருகிறோம்.

பலூன் பாகங்கள் மீட்கப்பட்ட பிறகு மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம். இந்த பலூன் தன்னைத் தானே சூழ்ச்சி செய்யும் திறன் கொண்டது. வேகத்தை கூட்டவும், குறைக்கவும் திரும்பவும் முடியும் என்றார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, அமெரிக்காவில் உளவு பார்க்கும் முயற்சியாகவே சீன பலூன் அனுப்பப்பட்டுள்ளது. பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தால் அமெரிக்கா-சீனா இடையே உறவு பாதிக்காது என்றார்

Leave A Reply

Your email address will not be published.