துணிவு இருந்தால் தேர்தலை மார்ச்சில் நடத்திக் காட்டுங்கள்! – அரசுக்கு எதிரணி பகிரங்க சவால்.

“துணிவு இருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்திக் காட்டுங்கள்.”

இவ்வாறு அரசுக்குப் பகிரங்க சவால் விடுத்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் நடத்தப் பணம் இல்லை என்றால் அரசு அரச செலவைக் குறைக்க முடியும். மக்கள் இப்போது அனுபவிக்கும் துன்பத்துக்கு மக்கள் காரணமல்ல. அரசின் ஊழல், மோசடிகளே காரணம்.

இந்தநிலையில் நாம் தேர்தலைக் கேட்பது கிராமங்களில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான். சிறு சிறு தொழில்களை அபிவிருத்தி செய்ய முடியும். அதனூடாக அந்த மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை கிராமங்களில் இருந்து ஆரம்பமாக வேண்டும். அதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேண்டும். கிராமங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தை நாசமாக்கியவர்களைப் பழிவாங்குவதற்காக இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காகவே இதைப் பயன்படுத்த வேண்டும் என்றே சொல்கின்றேன்.

நல்லவர்களை வேட்பாளர்களாகக் களமிறக்க வேண்டும். கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி கலவரத்தின்போது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தவர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக உள்ளார்கள் என்று அரச உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அது பொய்.

வீடுகள் எரிவதைப் பார்த்துக்கொண்டு நின்றவர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். எம் மீது இருக்கின்ற கோபம் காரணமாக எமது ஆதரவாளர்களும் தீ வைத்தார்கள் என்று அரச தரப்பினர் பொலிஸிடம் கூறினர். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தீ வைத்தார்கள் என்று நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் எவரும் எங்களது வேட்பாளர் பட்டியலில் இல்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.