காங்கிரஸ் கட்சியினர் முகத்தை டெட்டால் வைத்து கழுவிவிட்டு ஊழல் குறித்து பேசுங்கள் – நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 2023-24 பட்ஜெட் குறித்த விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுத்தார்.

அவர் பேசியதாவது, “ஊழலை பற்றி யார் பேசுவது, காங்கிரஸ் கட்சி ஊழலை பற்றி பேசலாமா. காங்கிரஸ்காரர்கள் முதலில் உங்கள் முகத்தை டெட்டாலை வைத்து சுத்தம் செய்துவிட்டு ஊழல் குறித்து பேசுங்கள். ஆளும் பாஜக மீது விமர்சனம் வைக்க வேண்டியது. பின்னர், அதற்கு நாங்கள் பதில் அளித்தால் அதை கேட்டு மறுவாதம் வைக்காமல் அவையை விட்டு வெளிநடப்பது. இது தான் காங்கிரஸ் கட்சியின் கலாசாரம்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு 2023-24 பட்ஜெட்டை படிக்காமல் கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டையே மீண்டும் படிக்கிறது. தவறுகள் நடக்கலாம். ஆனால், இது போன்ற தவறுகள் யாருக்கும் நடக்கக் கூடாது என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

மத்திய பாஜக அரசு 2023-24 மத்திய பட்ஜெட்டை அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி புகார் கூறுவது போல ஒன்று இரண்டு பெரும் முதலாளிகளுக்கான பட்ஜெட் இல்லை. இந்திய மக்களின் தேவை, அரசின் நிதி நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமநிலையான பட்ஜெட் இது” எனப் பேசியுள்ளார். முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரத்தை கையிலெடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.