பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்குத் தடை

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் 26 பேரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மேலும் மோசமடைந்து, போர்மேகம் சூழ்ந்துள்ளது.

இருநாடுகளிலும் உள்ள இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.

அத்துடன், எல்லைப் பகுதிகளிலும் இரு நாடுகளும் பாதுகாப்பைப் பலப்படுத்தி, ராணுவப் படையினரைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாடு தடைவிதித்தது.

இதனையடுத்து, இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்கள் தன் நாட்டின்மீது பறந்துசெல்வதற்குத் தடைவிதித்துள்ளது. இந்தத் தடை வியாழக்கிழமை (மே 1) தொடங்கி மே 23ஆம் தேதிவரை நீடிக்கும் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் புதன்கிழமை மாலை வெளியிட்ட உத்தரவு தெரிவிக்கிறது.

அதன்படி, பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களும் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த முடியாது.

பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நேரடி விமானங்கள் இல்லை.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்காசிய நாடுகளுக்குச் செல்ல பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.