நாடாளுமன்றம் தீர்மானித்தால்கூட 13 ஐ முழுமையாக அமுல்படுத்த இடமளியோம்! – பௌத்த பிக்குகள் எச்சரிக்கை.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இதனைச் செய்வதற்கு முற்படும் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகளின் அரசியல் முகவரியும் இல்லாது செய்யப்படும் எனவும் அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர் சமுதித்தவுடன் நடைபெற்ற நேர்காணலின்போதே உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அக்மீமன தயாரத்ன தேரர் ஹெல உறுமயவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர். தற்போது சிங்கள ராவய அமைப்பை வழிநடத்துகின்றார். உலப்பனே சுமங்கல தேரர், அதிபர் – ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின்போது முன்னின்று செயற்பட்டவர்.

இருவரும் 13 இற்கு எதிராக மகா சங்கத்தினர் கொழும்பில் நடத்திய போராட்டத்தை ஏற்பாடு செய்வத்கு முன்னின்று செயற்பட்டவர்கள்.

“விக்னேஸ்வரன் ஒரு கள்ளத்தோணி. அவருக்கு என ஒரு இனம் இல்லை. வடக்கு மக்களுக்காகக் கதைக்கின்றார். ஆனால், கொழும்பு 7 இல் வாழ்கின்றார். அவரின் பிள்ளைகள் சிங்களவர்களையே மணம் முடித்துள்ளனர். படித்தது றோயல் கல்லூரி. கதைப்பது ஆங்கிலம். இப்படியானவர்கள்தான் கள்ளத்தோணி.

விக்னேஸ்வரன் சில்லறைத்தனமான மனிதன். ஒற்றையாட்சி அரசமைப்பில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, சமஷ்டி பற்றி கதைக்கின்றார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றும் குறித்த தேரர்கள் குறிப்பிட்டனர்.

“13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் எதிர்க்கின்றோம். பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடக்கூடும். அதனால்தான் 13 ஐக் கொண்டு வந்த ஜே.ஆர். கூட இந்த அதிகாரங்களைப் பகிரவில்லை. 13 ஐ அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால்கூட அது அமுலாவதற்கு மகாசங்கத்தினர் இடமளிக்கமாட்டார்கள். 13 ஐ வழங்க முற்படும் அரசியல்வாதிகளும் முகவரியற்றுபோவார்கள்” – என்றும் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.