வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் ஓ.பன்னீர்செல்வம்..!

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீஸின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக் கோரியும் பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுத்தததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறையின் நோட்டீஸை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்குத்தூஸ், மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.