ராணுவ வீரர் கொலை வழக்கு – திமுக கவுன்சிலரின் ஜாமின் மனு தள்ளுபடி

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலரின் மகன் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பிரபாகரன் மற்றும் பிரபு. இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், குடிநீர் தொட்டியின் அருகில் துணிகளை துவைத்துள்ளனர். அப்போது நாகரசம்பட்டி பேரூராட்சி மன்ற திமுக கவுன்சிலர் சின்னசாமி, இதை தட்டிக்கேட்டதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்ற சின்னச்சாமி, ராணுவ வீரர்கள் பிரபு, பிரபாகரன், அவர்களது தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி மாலை ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக நாகரசம்பட்டி காவல் நிலையத்தினர் கொலை வழக்கு பதிவு செய்து திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன் புலிப்பாண்டி, தம்பி காளியப்பன், உறவினர் மாதையன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் சின்னசாமியின் மகன் புலிப்பாண்டி, சகோதரர் காளியப்பன், உறவினர் மாதையன் ஆகிய மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடியுள்ளதால், ஜாமீன் வழங்கக் கூடாது என என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.