வடகொரியாவில் அதிபரை பற்றி இணையதளத்தில் தேடிய அதிகாரிக்கு மரண தண்டனை.

வடகொரியாவில் அதிபரை பற்றி இணையதளத்தில் தேடியதற்காக உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இங்கு சிறு குற்றங்களுக்கு கூட அதிக தண்டனை வழங்கப்படுகிறது.

அதுபோல தன்னை எதிர்ப்பவர்கள் மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. வடகொரியாவில் வெளியுலகம் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சினிமா படங்கள், நாடகங்கள் உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் கிடையாது. வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை போல சி.டி. கேசட்களை கடத்தி பார்க்க வேண்டும். அதுவும் வெளியே தெரிந்தால் தேசத்துரோக குற்றமாக கருதப்பட்டு அதற்கு மரண தண்டனை வரை வழங்கப்படும். அதுபோல அந்த நாட்டை குறித்த எந்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை. குறிப்பாக அங்கு பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது.

அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என்பதை கண்காணிக்க தனியே ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அனுப்பும். அந்த வகையில் அண்மையில் அதிபருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் அவரை பற்றிய தகவல்களை `பியூரோ 10′ என அழைக்கப்படும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இணையத்தில் தேடியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடும் கோபம் அடைந்த அதிபர் கிம் ஜாங் உன், அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். நாட்டின் உயர் பதவியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கே மரண தண்டனை வழங்கி இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.