பிரதமர் அலுவலக அதிகாரி போல நாடகமாடி கமாண்டோ பாதுகாப்பு வசதியுடன் வலம்வந்த மோசடி நபர்..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள லலித் கிராண்ட் ஹோட்டலில் கிரண் படேல் என்ற நபர் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி என்று கூறி தங்கியிருப்பதாக காஷ்மீர் காவல்துறைக்கு துப்பு கிடைத்தது. அதன் பேரில் கிழக்கு ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு தனிப்படை கடந்த மார்ச் 3ஆம் தேதி ஹோட்டலுக்கு விரைந்த அந்த நபரை பிடித்து விசாரித்தது. அப்போது பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் அம்பலமானது.

கைதான நபர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் படேல். பலே மோசடி பேர்வழியான இவர் மீது குஜாரத் மாநிலத்தில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வந்து அங்குள்ள இரு மாவட்டங்களின் துணை ஆணையர்களை சந்தித்து பேசியுள்ளார். தான் பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரி, உத்திகள் மற்றும் பிரசாரப் பிரிவின் கூடுதல் இயக்குநர் பொறுப்பில் இருப்பதாக கூறி நாடகமாடியுள்ளார்.

இதை நம்பிய அவர்கள் கிரண் படேலுக்கு புல்லட் ப்ரூப் வாகனத்துடன் கூடிய கமாண்டோ பாதுகாப்பு வசதியை செய்து கொடுத்துள்ளனர். தெற்கு காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஆப்பிள் தோட்டங்களை அடையாளம் காண தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக கதை கட்டி பல அரசு அதிகாரிகளை ஏமாற்றி காஷ்மீரில் தங்கி வந்துள்ளார். இவருடன் குஜராத்தை சேர்ந்த ஒருவரும், ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நபரும் தங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் சிஐடி பிரிவுக்கு இவரது மோசடி குறித்து தகவல் கிடைக்கவே, அதன் மூலம் கிரண் படேல் சிக்கியுள்ளார். அவருடன் இருந்து மூன்று நபர்களும் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.

பிரதமர் அலுவக அதிகாரி என்று கூறினால் அதை சாரிபார்க்காமல் எப்படி ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகத்தினர் கோட்டை விட்டனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகளிடம் தற்போது விசாரணை நடைபெறுகிறது.

கைது செய்யப்பட்ட கிரண் படேல் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன் தனிப்படை ஒன்று குஜராத் விரைந்து அங்கும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ஜம்மு காஷ்மீரிலேயே ஒரு நபர் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி பலே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.