தேர்தலைத் தொடர்ந்து ஒத்திப்போட்டால் நாட்டின் நிலைமை மேலும் மோசமடையும்!- அரசுக்குச் சஜித் அணி எச்சரிக்கை.

“தேர்தலை ஒத்திப்போட ஒத்திப்போட நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையும்.”

இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஐக்கிய மக்கள் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு பயங்கரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சாப்பாடு இல்லாததால் நாள் பூராகவும் உறங்கும் மக்கள் மலையகத்தில் உள்ளார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நாட்டை இப்படியான நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லாவிட்டால் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. அதனால்தான் சர்வதேச நாணயத்தின் நிதி கிடைப்பது தாமதமாகின்றது.

இலங்கையில் பல வருடங்களாக பல நிறுவனங்கள் இலங்கையை விட்டுப் போவதற்கு முடிவெடுத்துள்ளன. தேர்தலை ஒத்திப்போட ஒத்திப்போட இந்த நிலைமை இன்னும் மோசமாகும்.

தேர்தலை நடத்தி மக்கள் அவர்கள் விரும்பும் ஆட்சியை நிறுவுவதற்கு இடம் கொடுக்க வேண்டும். தேர்தலை ஒத்திப்போட முடியாது. அதனால் அரசு உள்ளூராட்சி தேர்தல் சட்டத்துக்குத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாங்களே வெற்றிகொள்வோம். அதனைத் தொடர்ந்து வருகின்ற அனைத்துத் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெறுவோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.