இலங்கையின் பல பகுதிகள் சர்வதேச போர் அபாயத்தில்!

கொழும்பு துறைமுகத்தில் இந்தியா தனது போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தொழிற்சாலையை நிறுவ தயாராகி வருவதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட கூறுகிறார்.
சமீபத்தில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை ஆளும் கூட்டணியின் அமைச்சர்கள் கூட பார்க்கவில்லை என்றும், தன்னுடனான தனிப்பட்ட தொடர்புகளில் உள்ள பல அமைச்சர்கள் இது குறித்து உறுதிப்படுத்தியதாகவும் அவர் இணைய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கூறினாலும், இந்திய ஊடகங்கள் அது 10 என்று கூறுகின்றன. மேலும், இலங்கையில் இந்திய ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத கிடங்குகள் நிறுவப்படுவது குறித்து இந்திய பாதுகாப்பு செயலாளர் அவர்களது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்றும் புபுது ஜாகொட இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்கள் பொய்யானவை என்றால், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவற்றை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அதற்கு பதிலாக அமைச்சரவை செய்தி தொடர்பாளர் நளின் ஜயதிஸ்ஸ இந்திய அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் போல் செயல்படுகிறார் என்றும் கூறுகிறார்.
இந்த ஒப்பந்தங்கள் காரணமாக இலங்கை பிராந்தியத்தில் கடுமையான போர் அபாயத்தை சந்திக்கும் என்றும், சுதந்திரத்திற்குப் பிறகு எந்த அரசாங்கமும் இலங்கை அரசின் இறையாண்மையை வேறு எந்த நாட்டிற்கும் இப்படி காட்டிக் கொடுக்கவில்லை என்றும் அவர் இந்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.