கடைசி போட்டியில் இந்தியா போராடி தோல்வி: ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் சேர்த்தார். அலெக்ஸ் கேரி 38 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அக்சர் பட்டேல், சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் சற்று நிதானமாக ஆடிய சுப்மன் கில் 37 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் விராட் கோலி-கேஎல் ராகுல் ஜோடி சற்று தாக்குப்பிடித்து நம்பிக்கை அளித்தது. கேஎல் ராகுல் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் 2 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த பந்தில் சூரியகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 185 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். அவர் 40 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த சில நிமிடங்களில் ரவீந்திர ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார்.

இதனால் இந்தியாவின் வெற்றிக் கனவு தகர்ந்தது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஷமி 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 6 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

49.1 ஓவர்களில் இந்திய அணி 248 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என கைப்பற்றியது.

Leave A Reply

Your email address will not be published.