𝗩𝗔𝗥𝗢𝗗 அமையத்தினால் நடாத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர்.

வன்னி பிரதேச மாற்றுத்திறனாளிகளும் மென்பந்து கிரிக்கெட் விளையாட்டினை அணுகும் நோக்குடனும், பயனாளிகளை தேசிய மட்ட போட்டிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு அமையத்திற்கான ஓர் அணியினைத் தெரிவு செய்யும் நோக்குடனும், அமையத்தின் நிறைவேற்று இயக்குனர் அருட்தந்தை வின்சன்ட் டீ போல் குரூஸ் CMF அவர்களினால் மென்பந்து கிரிக்கெட் அணிகளை உருவாக்கும் முயற்சிகள் 2022 ம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவந்தநிலையில் 23-09-2022 அன்று முல்லைத்தீவு உடுப்புக்குளம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முல்லைத்தீவு (நெய்தல் அணி), கிளிநொச்சி (மருதம் அணி) மற்றும் வவுனியா (குறிஞ்சி அணி) மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 3 அணிகள் தெரிவுசெய்யப்பட்டன.

இச்செயற்பாட்டின் அடுத்த கட்டமாகவும் தேசிய மட்ட அளவிலான சுற்றுப் போட்டிகளுக்கான ஓர் அணியினைத் தெரிவு செய்வதற்காகவும் 45 வீரர்களைக் கொண்ட 3 அணிகள் உள்வாங்கப்பட்டு, கிரிக்கெட் மென்பந்து இறுதிச் சுற்றானது நிறைவேற்று இயக்குனர் தலைமையில் 22-03-2023 அன்று வவுனியா யங் ஸ்டார் மைதானத்தில் சிறப்பாக நடந்தேறியது.

பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருவாளர் T. திரேஸ்குமார் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு இணைப்பாளர் திருவாளர் R.சிவசேகரம், வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திருவாளர் T.அமலன், வட மாகாண மற்றும் வவுனியா மாவட்ட கிரிக்கெட் சபைத் தலைவர் திருவாளர் Y. ரதீபன், வட மாகாண மற்றும் வவுனியா மாவட்ட நடுவர் சங்கத் தலைவர் திருவாளர் J.சுதாதரன், வவுனியா பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருவாளர் N. பாலகுமாரன், வவுனியா வடக்கு பிரதேச செயலக சமூக சே வைகள் உத்தியோகத்தர் திருவாளர் V. தர்சிகன், வெங்கள செட்டிகுள பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருவாளர் S. நிரோசன், வவுனியா சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருவாளர் K. வசந்தரூபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்திய மருதம் அணியானது முல்லை மற்றம் நெய்தல் அணிகளுடன் தொடர் போட்டிகளில் பங்கேற்று இறுதியாக சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. மேலும் சிறந்த பந்து பற்றுனராக நெய்தல் அணியைச் சேர்ந்த K. புவனேந்திரன் அவர்களும், சிறந்த பந்துவீச்சாளராக மருதம் அணியைச் சேர்ந்த N. சகாதீசன் அவர்களும், சிறந்த துடுப்பாட்ட வீரராக குறிஞ்சி அணியைச் சேர்ந்த B. தர்மசீலன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஆட்ட நாயகன் விருதினை மருதம் அணியைச் சேர்ந்த N. சகாதீசன் அவர்களும் தொடர் நாயகன் விருதினை குறிஞ்சி அணியினைச் சேர்ந்த B. தர்மசீலன் அவர்களும் சுவீகரித்துக் கொண்டனர். மேலும் இப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.