ஏகாதிபத்திய மனோநிலையுடன் செயற்பட்ட கோட்டாவின் செயலாளர்! – மோசமான நிலைமை குறித்து பந்துல விளக்கம்.

“கோட்டாபய ராஜபக்ச எடுத்த பொருளாதாரத் தீர்மானம்தான் நாட்டின் மோசமான நிலைமைக்குக் காரணம். உண்மையில் அவருக்குப் பொருளாதார ஆலோசனை வழங்குவதற்கு எவராலும் முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அவரது செயலாளர் ஏகாதிபத்திய மனோநிலையுடன் செயற்பட்டார். அவரது நிலைப்பாட்டைத் தவிர வேறு எவரது நிலைப்பாடும் – ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.”

இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கோட்டாபயவின் ஆட்சியில் வரிக் குறைப்புகள் எவையும் அமைச்சரவை அனுமதியுடன் இடம்பெற்றவை அல்ல. நாங்கள் ஊடகங்கள் ஊடாகவே இவ்வாறு நடந்திருப்பதை அறிந்தோம். ஜனாதிபதியின் செயலாளர் எடுத்த தனிப்பட்ட முடிவின்படியே எல்லாம் நடந்தது.

49 ரூபாவாக இருந்த சீனி வரி நள்ளிரவில் 25 சதமாகக் குறைக்கப்பட்டது. அப்போது நான் வர்த்தக அமைச்சர். அப்போது நான் இருந்தது அபயராம விகாரையில். சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் வரி இன்று நள்ளிரவு குறைக்கப்படும் என்று செய்தி வெளியானது. எனக்கு எதுவுமே தெரியாது.

ஏற்கனவே 49 ரூபா வரியில் இறக்குமதி செய்யப்பட சீனி தொகை களஞ்சியசாலையில் உள்ளது. இதனால் இறக்குமதி செய்த வர்த்தகர்களுக்கு 48.75 ரூபா நட்டம்.

அந்த வர்த்தகர்கள் காலையில் எனது அமைச்சுக்கு வந்தனர். நான் அமைச்சில் இதற்கு எதிராக முடியுமானவரை வாதாடினேன். எதுவும் நடக்கவில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.