ஊழலுக்கு எதிரான சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி பூரண ஆதரவு!

ஊழலுக்கு எதிரான எந்தவொரு சட்டமூலத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தமது முழுமையான ஆதரவை வழங்கும் என்று அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“ஆசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

அவ்வாறான சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் கடந்த மே மாதமே முன்வைத்தோம்.

ஆளும் தரப்பாக இல்லாததால், தனி நபர் பிரேரணையாக அதனைத் தாக்கல் செய்தோம்.

நாங்கள் கொண்டு வந்த சட்டமூலங்கள் தொழிற்சங்கங்களை நசுக்கும் விதமாகவோ அல்லது இளைஞர்களைக் கைது செய்யவோ அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளைச் சீர்குலைக்கும் வகையிலோ அமைந்திருக்கவில்லை.

அரசு கொண்டுவரவுள்ள ஊழலுக்கு எதிரான சட்டமூலம் திருடர்களைப் பிடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஊழல் அதிகம் இருந்ததால்தான் இந்த நாடு வங்குரோத்து நிலைக்கு வந்தது என்பதை நாம் அறிவோம். தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் பெருமளவான வழக்குகள் குவிந்து கிடக்கின்றன.

திருடர்களுடன் இருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்கவால் இதனை எவ்வாறு மேற்கொள்ள முடியும். இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றினாலும் அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஊழலுக்கு எதிரான எந்தச் சட்டமூலத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் பூரண ஆதரவு வழங்குவோம் என்று கூறுகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.