ஓமானிய நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறப் போவதாக எச்சரித்துள்ளது. காரணம்?

சட்டத்தை நிறைவேற்றாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறப்போவதாக இந்திக்க அனுருத்தவுடன் தொடர்புடைய குண்டர்களால் தாக்கப்பட்ட ஓமானிய முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமானின் பிரதான முதலீட்டாளருக்குச் சொந்தமான நீர்கொழும்பு கட்டான அல் ஒபேதானி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மீது, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவுடன் தொடர்புடைய அரசியல் கும்பல் தாக்குதல் நடத்தியமை தொடர்பில், சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லையானால் , இலங்கையில் உள்ள வியாபார நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு தமது முதலீடுகளுடன் இலங்கையை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான ஓமானிய தூதுவர் இன்று (03) வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எழுத்துமூல அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பவும் ஓமன் தூதுவர் ஏற்பாடு செய்துள்ளார்.

அல் ஒபேதானி நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கான ஓமானிய தூதுவருடன் , வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து நடந்த , தாக்குதல் தொடர்பாக கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டர் தாக்குதல் தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டத்தில் சட்டம் அமுல்படுத்தப்படாமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஓமானிய தூதுவர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விடயத்தில் அரசியல் குண்டர் சக்தியை பயன்படுத்தினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு சோகமான கதி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். .

சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களிடம் தெரிவித்துள்ளார். காவல்துறை மூலம் இயன்றவரை சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் ஓமன் தூதுவரிடம் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஓமானின் அல் ஒபேதானி நிறுவனம், ஓமனின் தேசிய ஆடைகளை உற்பத்தி செய்யும் முக்கிய நிறுவனமாகும்.

சீதுவவில் ஒரு தொழிற்சாலை உள்ளது. அல் ஒபேதானியின் சகோதர நிறுவனம், ஜவுளி விற்பனைக்கான கடைகளின் சர்வதேச நெட்வொர்க் ஆகும்.

இந்நிறுவனம் பணக்காரர்களுக்கு மிகவும் விலையுயர்ந்த மற்றும் உயர்தர ஆடைகளை உருவாக்கும் நிறுவனமாகும். .

கட்டானவில் அமைந்துள்ள அல் ஒபிதானி நிறுவனத்தின் தொழிற்சாலையில் சுமார் முன்னூற்று ஐம்பது ஊழியர்கள் நேரடியாகப் பணிபுரிகின்றனர்.

நிறுவனத்தின் போக்குவரத்து திணைக்களத்திற்கு வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான பிரச்சினையில் இந்திக அனுருத்தவுடன் தொடர்புடைய குண்டர்கள் , வாகனமொன்றை வாடகைக்கு விடுவது தொடர்பான பிரச்னையால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , இலங்கை முதலீட்டுச் சபையால் கட்டானவில் நடத்தப்படும் ஓமானிய முதலீட்டாளர் ஒருவருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலைக்குள் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சரான இந்திக்க அனுருத்தவுடன் நெருக்கமான கும்பல் புகுந்து ஓமானிய முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி தொழிற்சாலை வளாகத்தை சேதப்படுத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சரான இந்திக்க அனுருத்தவின் அறிவித்தலின் பேரில், அவரது “சாகா” ஒருவர், தனக்குச் சொந்தமான ஒரு வேனை தொழிற்சாலைக்கு வாடகை அடிப்படையில் தர விரும்புவதாகக் கூறி, மேற்கண்ட தொழிற்சாலைக்கு கடந்த மார்ச் 30ஆம் தேதி சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் அக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, “அமைச்சரின் சாகா” நிர்வாகத்தை திட்டி மிரட்டியுள்ளார்.

மேலும், மறுநாள் இரவு பலவந்தமாக தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்த அமைச்சரின் குண்டர்கள், பாதுகாப்பு அதிகாரி ஒருவரைத் தாக்கி, அங்குள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த நிர்வாக இயக்குனரையும் தாக்கி, அவரது சொத்துக்களையும் வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடிதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.