மாதவிடாய் நின்று விட்டதை அறிந்து கொள்வது எப்படி?

உலகில் பொதுவாகப் பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின் சராசரி வயது 49-51 எனக் கருதப்பட்டாலும், இந்தியப் பெண்களில் மாதவிடாய் நிறுத்தம் 47-49 வயதில் ஏற்படுகிறது. அதாவது உலகெங்கிலும் உள்ள பெண்களை விட இந்தியப் பெண்கள் மாதவிடாய் நிற்றல் விரைவாக ஏற்படுகிறது.

“எந்த ஒரு பெண்ணுக்கும் கருவுறும் காலமோ மாதவிடாய் நிற்கும் காலமோ அவரவர் உடல் வாகைப் பொறுத்தது. மற்ற எவருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு வரை, சாதாரண மாதவிடாய் இருக்கும். பின்னர், அது நின்றுவிடும்.

சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. மற்றும் சில பெண்களுக்குச் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, இடைவெளி அதிகரிக்கிறது. இந்தக் காலகட்டம், ப்ரீமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது.

இது, சில மாதங்கள் முதல் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை இருக்கலாம். கடைசி மாதவிடாய் காலத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு 12 மாதங்கள் வரை மாதவிடாய் வரவில்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது.

மாதவிடாய் நின்ற பிறகு ஒரு பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது அசாதாரணமாகவே கருதப்படுகிறது.” என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வயது அதிகரிக்க, அதிகரிக்க, பெண்களின் பிறப்புறுப்புகள் வறண்டு போகின்றன, கருப்பை வாய்க் கட்டி, கருப்பையின் புறணி தடித்தல் அல்லது மெலிந்து போதல், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அல்லது நோய்த்தொற்றுகளால் உதிரப்போக்கு ஏற்படலாம்.

மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு சில நேரங்களில் சிறிய காரணங்களாலும் இருக்கலாம். சில சமயங்களில் இது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

மாதவிடாய் நின்ற பிறகு, லேசான வடுவோ, அதிக இரத்தப்போக்கு அல்லது எந்தவிதமான இரத்தப்போக்கு இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இது புற்றுநோயாக இருக்க பத்து சதவீதம் வாய்ப்புள்ளது.

இந்தப் புற்றுநோய் கருப்பையிலோ அல்லது அதன் வாயிலோ அல்லது சினைப்பையிலோ அல்லது யோனியிலோ ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, இரத்தப் பரிசோதனைகள், பேப் ஸ்மியர்ஸ், எண்டோமெட்ரியல் பயாப்ஸி, சோனோகிராபி மற்றும் டி.என்.சி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

“இரண்டு-மூன்று மாதங்களாக மாதவிடாய் ஏற்படவில்லை என்றால், மாதவிடாய் நின்று விட்டது என்று கருதும் பெண்கள், கருத்தடைச் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள். அதனால் அந்த வயதில் அவர்கள் கர்ப்பமடைகிறார்கள். அது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.” என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளுடன் பல தம்பதியர் வருவதாகவும் அந்த நேரத்தில், கருக்கலைப்பு செய்வது மிகவும் கடினமாகிவிடுவதாகவும், இதனால், அவர்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எனவே, பெண்ணுக்கு மாதவிடாய் நின்றது மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படும் வரை தம்பதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.