மீண்டும் எம்.பியாகுவதற்கு முயற்சிக்கின்றாரா பஸில்? தீர்மானம் இல்லை என்கின்றது ‘மொட்டு’.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றம் வருவது தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என்று மொட்டுக் கட்சியின் எம்.பி. ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமையை துறந்து பஸில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார் எனவும், இதற்காகத் தேசியப்பட்டியல் எம்.பி. ஒருவர் பதவி விலகுவார் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“இவ்வாறான கலந்துரையாடல் கட்சிக்குள் இடம்பெறவில்லை. கட்சி தொடர்பில் சிந்தித்தே பஸில் ராஜபக்ச முடிவெடுப்பார். கட்சிக்காகத்தான் அவர் நிதி அமைச்சுப் பதவியைக்கூட இழந்தார்” எனவும் ரஞ்சித் பண்டார எம்.பி. குறிப்பிட்டார்.

அதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்ச பொது வேட்பாளராகக் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு அதில் எவ்வித தவறும் இல்லை என அவர் பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.