தீர்வு கிடைக்க ஆவன செய்வார் இந்தியத் தூதுவர்! – வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர்

இந்தியத் தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்ததாகவும் வெடுக்குநாறி ஆலய விவகாரத்துக்கு விரைவில் தீர்வு கிடைக்க ஆவன செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் வெடுக்குநாறி ஆலய நிர்வாக உறுப்பினர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் உட்பட வவுனியாவை சேர்ந்த இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பு இந்துமாமன்றம் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழு இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயை நேற்றுச் சந்தித்திருந்தது.

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை மீண்டும் விக்கிரகங்கள் வைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்தும் தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எல்லையோர கிராமங்களில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்களுடன் சைவ அடையாளங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பாகவும் இதன்போது இந்தியத் தூதுவருக்கு ஆவணங்கள் ஊடாக தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தம்மாலான செயற்பாடுகளை மேற்கொள்ள தாம் முனைப்பு காட்டுவோம் என இந்திய தூதுவர் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பௌத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடனும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. நீதிமன்றில் வழக்கு இருப்பதால் உடனடியாக இதில் தலையிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் என ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.