பருத்தித்துறை சிசு மரணம் தொடர்பில் திங்களன்று நீதிமன்ற விசாரணை!

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பின்மை காரணமாக சிசுவொன்று உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணையை, நாளைமறுதினம் திங்கட்கிழமைக்கு நிர்ணயித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம், பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார்.

புலோலி வடக்கு, கூவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பிரசவத்துக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டுள்ளன. பின்னர், சிசு இறந்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், தாயாருக்கு ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர், உரிய முறையில் மருத்துவக்கண்காணிப்பு இன்மையால் கருப்பை வெடித்து, சிசுவுக்கு குருதி கடத்தப்படுவது தடைப்பட்டுள்ளமை உறுதியானது எனத் தெரிவித்து, மேலதிக விசாரணைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். இது தொடர்பில் பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான விசாரணையை நாளைமறுதினம் திங்கள்கிழமை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.