ஊடகங்கள் முன் அரசியல்வாதியும் , சகோதரரும் சுட்டுக்கொலை (வீடியோ)

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏவும் பிரபல தாதாவுமான அடிக் அகமது, போலீசாரால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரப்பிரதேச முன்னாள் எம்.எல்.ஏவும் தாதாவுமான அடிக் அகமது, வழக்கறிஞர் உமேஷ்பால் படுகொலை வழக்கில் சகோதரர் அஷ்ரப் அகமதுவுடன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடிக் அகமது மகன் ஆசாத்தும் தேடப்பட்டு வந்தார். அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த என்கவுன்டர் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு செய்தியாகியிருந்த நிலையில் அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது நேற்று கொலை செய்யப்பட்டு உள்ளனர். அடிக் அகமது மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த அரசியல் தாதாவான அடிக் அகமது மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது வழியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அங்கே செய்தியாளர்கள் போல வந்தவர்கள் போலீசாருக்கு முன்னிலையில், சுட்டனர். செய்தியாளர்கள் படம் பிடித்துக் கொண்டு இருக்கும் போது நெஞ்சை உறையை வைக்கும் வகையில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டது.

இதில் அடிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவருமே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். பத்திரிகையாளர்கள் போர்வையில் ஊடுருவியிருந்த 3 கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனவர். அவர்கள் 3 பேரும் அப்போது ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடிக் அகமது கொலையால் உத்தர பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இதனால், அந்த மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அடிக் அகமதுவை படுகொலை செய்த 3 பேர் விவரங்களும் வெளியாகி உள்ளன. சன்னி சிங், லவ்லேஷ் திவாரி, அருண் மெளரியா ஆகியோர் கொலையாளிகள் என தெரியவந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இதில், லவ்லேஷ் திவாரி, பஜ்ரங்தள் இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவர் எனவும் தனது சமூக வலைத்தளதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, லவ்லேஷ் திவாரியின் தந்தை யக்யா திவாரி தனது மகன் வேலைக்கு எதுவும் செல்லாமலும் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த யக்யா திவாரி கூறியதாவது:-

லவ்லேஷ் திவாரி எனது மகன் தான். இந்த கொலையை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தோம். வேலை எதுவும் இன்றி போதைக்கு அடிமையானவனாக எனது மகன் இருந்தான். எங்களுடன் ஒருபோதும் அவன் வசித்தது இல்லை. அவனது எந்த செயல்களும் பற்றி எங்களுக்கு தெரியாது. எங்களிடம் எதுவுமே கூற மாட்டான். கடந்த 5, 6 தினங்களுக்கு முன் இங்கு வந்தான்.

பல ஆண்டுகளாக லவ்லேஷ் திவாரியிடம் நாங்கள் பேசுவதில்லை.அவனுக்கு எதிராக வழக்குகளும் உள்ளன. சிறையிலும் இருந்தான்” என்றார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருண் மெளரியாவின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துள்ளனர். அதன்பிறகு தனது சொந்த ஊரான கஸ்கஞ்ச் மாவட்டத்திற்கு திரும்பவே இல்லையாம்.

Leave A Reply

Your email address will not be published.