கோட்டா – மஹிந்தவைச் சமரசப்படுத்தும் நடவடிக்கை தோல்வி!

மஹிந்த குடும்பமும் கோட்டாபய குடும்பமும் போட்டிக்குப் போட்டியாகக் காலைவரும் நடவடிக்கைகளில் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் கடந்த கால தான்தோன்றித்தனமான ஆட்சி காரணமாக மஹிந்த குடும்பத்துக்கும் கோட்டாபய குடும்பத்துக்கும் இடையில் நீண்ட காலமாகப் புகைச்சல் இருந்து வருகின்றது. இதை இப்படியே விட்டுவிட்டால் ராஜபக்ச ஆட்சி நிரந்தரமாகக் கைவிட்டுப் போய்விடும், ராஜபக்ச குடும்பம் வீழ்ச்சியடைந்துவிடும் என அஞ்சிய அந்தக் குடும்ப உறுப்பினர் ஒருவர் இவர்களையெல்லாம் ஒரே மேசைக்கு அழைத்து ஒற்றுமைப்படுத்துவதற்கான வேலை ஒன்றில் இறங்கினார்.

அவரது வீட்டில் இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்து எல்லோருக்கும் அழைப்பு விடுத்தார். எல்லோரும் வருவதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.

இறுதியில் மஹிந்த குடும்பம் காலைவாரிவிட்டது. விருந்து இடம்பெற்ற அன்றைய தினம் மஹிந்த, ஷிரந்தி, நாமல் ஆகியோர் தங்காலையில் உள்ள அவர்களின் வீட்டுக்குச் சென்று விட்டனர். அவர்களைத் தவிர ஏனையவர்கள் கலந்துகொண்டனர். கோட்டாபய கூட மனைவியுடன் கலந்துகொண்டார்.

மஹிந்த அதில் கலந்துகொள்வதற்குத்தான் இருந்தார். ஆனால், ஷிரந்தியும் நாமலுமே மஹிந்தவைப் போக விடாமல் தடுத்து தங்காலைக்கு அழைத்துச் சென்றார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஒன்றுகூடலை நடத்தி ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அந்தக் குடும்ப உறுப்பினர் முற்பட்டார்.

அதன்படி சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு ஒன்றுகூடலை அவர் ஏற்பாடு செய்தார்.

அந்த ஒன்றுகூடலில் முன்பு வர மறுத்த மஹிந்த, ஷிரந்தி, நாமல் எல்லோரும் கலந்துகொண்டனர். ஆனால், அதில் கோட்டாவும் அவரது மனைவியும் கலந்துகொள்ளவில்லை.

அந்த இடத்தில் குடும்பத்தில் சிலர் கோட்டாவின் பிழையான ஆட்சியை விமர்சிக்கத் தவறவில்லை.

Leave A Reply

Your email address will not be published.