பரம்பரை சொத்துக்கு வரி.. பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

பரம்பரை சொத்துக்கு வரி விதிப்பது என்பது காங்கிரசின் ஆபத்தான உள்நோக்கம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பரம்பரை சொத்து மீது வரி விதிக்கும் திட்டம் எதுவும் காங்கிரஸிடம் இல்லை என விளக்கமளித்துள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி இருப்பதாகக் கூறி அதற்கு ஒரு விளக்கம் அளித்தார். ஒருவரிடம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது அதில் 45 சதவீதம் மட்டுமே தனது வாரிசுகளுக்கு மாற்ற முடியும் என்றும், 55 சதவீதம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், இது ஒரு சுவாரஸ்யமான சட்டம் என்றும் கூறினார். ஒருவர் ஈட்டும் செல்வத்தில் பாதியை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும் என்பது தனக்கு நியாயமாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது முழு சொத்தும் அவரது பிள்ளைகளையே சாரும் என்பதுடன், பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதால், இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருவதாக தெரிவித்துள்ளார். முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி திணிக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக கூறியிருப்பதாக தெரிவித்தார். அப்படியானால், உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சொத்துகளை காங்கிரஸ் பறித்துவிடும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பரம்பரை சொத்து வரி குறித்த தனது கருத்து சர்ச்சையான நிலையில், சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,பரம்பரை சொத்தில் 55 சதவீதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவிலும் இது நடக்கும் என்று யார் சொன்னது? பாஜக ஏன் பதற்றமடைகிறது? என வினவியுள்ளார்.

இந்நிலையில், பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை, அதுபோன்ற சிந்தனையும் இல்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸின் கருத்து அல்ல என்று கூறிய அவர், பிரதமர் மோடியின் பிரசாரம் தற்போது விஷத்தால் நிறைந்திருப்பதாக சாடினார். உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கில், திட்டமிட்டு அவநம்பிக்கையுடன் பிரதமர் மோடி இவ்வாறு பேசி வருவதாக விமர்சித்தார்.

இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் பெதுலில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணியில் ‘ஆண்டுக்கு ஒரு பிரதமர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த விவாதம் நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளது என கூறினார். 5 ஆண்டுகளுக்கு பிரதமர் நாற்காலியை ஏலம் விடுவதில் மும்முரமாக அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் மோடி விமர்சித்தார்.

மேலதிக செய்திகள்

மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!

கொள்ளை முயற்சியில் தோல்வியுற்ற ஆடவருக்குச் சிறை, பிரம்படி.

மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ராணுவ ஹெலிகாப்டர்கள்; 10 பேர் மரணம்.

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி.

உடல் எடையை குறைக்க ஆப்ரேஷன்; இளைஞர் உயிரிழப்பு – தந்தை கோரிக்கை!

பிரபல வங்கிக்கு அதிரடியாகத் தடை விதித்த ரிசர்வ் வங்கி

Leave A Reply

Your email address will not be published.