ரணில் தலைமையில் ‘ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல்’ நிகழ்வு!

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று ஜி.சீ.ஈ. உயர்தரத்துக்குத் தெரிவான மாணவ – மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன.

அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் ஜி.சீ.ஈ. உயர்தரத்துக்குத் தகுதி பெற்ற 3 ஆயிரம் மாணவ – மாணவியருக்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நாடு முழுவதிலுமுள்ள 100 வலயக் காரியாலயங்களை உள்ளடக்கியதாக வலயமொன்றுக்கு 30 என்ற அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புலமைப்பரிசில் வழங்கலின் அடையாள ரீதியாக மேல் மாகாணத்தின் 11 கல்வி வலயங்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 110 மாணவர்களுக்கு ஜனாதிபதியால் புலைமைப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் கீழ் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு ஜி.சீ.ஈ. உயர்தரத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை நிறைவு செய்யும் இரு வருட காலப்பகுதிக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதோடு அதற்காக 36 கோடி ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்துக்கு இணையாக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பாடசாலைப் பைகள், அப்பியாசக் கொப்பிகள், குடை, கடிகாரம் மற்றும் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான பரிசில்களும் புலமைப் பரிசில் பெற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் டபிள்யூ.ஏ.சரத் குமார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

புலமைப் பரிசில் பெற்றுக்கொண்ட ஏனைய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் என்பவற்றை அடுத்த இரு வாரங்களுக்குள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.