பிரதமர் பதவி கேட்ட மஹிந்த! – பதிலுக்கு ஜனாதிபதி வேட்பாளராக ரணில்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைக் கைப்பற்றும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

மீண்டும் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால் – அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் மீண்டும் மஹிந்த பிரதமராகி களத்தில் இறங்க வேண்டும் என்ற யோசனை குடும்பத்தாலும் கட்சியாலும் முன்வைக்கப்பட்டதால் மீண்டும் பிரதமர் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த இறங்கியுள்ளார்.

மறுபுறம், மஹிந்தவை பிரதமராக்கி தனது ஆதிக்கத்தை இலங்கைக்குள் நிலைநாட்ட வேண்டிய தேவை சீனாவுக்கு எழுந்துள்ளது. இதனால் சீனாவின் உந்துதலிலும் மஹிந்த இப்போது பிரதமர் பதவியைக் குறிவைத்துள்ளார்.

சீனப் பிரதமர் அடிக்கடி மஹிந்தவை அவரது விஜயராம இல்லத்தில் சந்தித்து வருகின்றார் என்றும், மஹிந்த பிரதமரானால் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 6 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்குவதற்குச் சீனா உறுதியளித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்கு முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்ட மஹிந்த, அவரைச் சந்திப்பதற்கு நேரம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன்படி சில நாட்களுக்கு முன் ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அந்தச் சந்திப்பில் பிரதமர் பதவியை மஹிந்த கேட்டார் என்றும், அதற்குப் பிரதி உபகாரமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை மொட்டுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதாகவும் மஹிந்த கூறி இருந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.