தையிட்டி விகாரையை அகற்றவே மாட்டோம்! – சவேந்திர சில்வா திட்டவட்டம்.

“யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது.”

இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் சவேந்திர சில்வாவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த விகாரை சட்டவிரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.