அன்னையர் தினம்: தாய்மையை போற்றுவோம்.

அம்மா!! நமக்கு உயிர் கொடுத்தவள், ஊன் கொடுத்தவள், பிறந்த பின்பு ஊட்டச்சத்துடன் அன்பையும் ஊட்டி வளர்த்தவள். வாழ்க்கை முழுவதும் நம் சுமைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தாங்க விரும்புபவள். அப்படிப்பட்ட அம்மாவிற்கும் வயதாகும்.

வயதாவதினால் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சனைகளும் தோன்றும். அவற்றை மகன் அல்லது மகள், அவர்களுக்கு நாம் திருப்பி செலுத்தக்கூடிய கடனாகவும் கடமையாகவும் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு உதவுவது சிறந்தது. அந்த வகையில் 45, 50 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கீழ் வருமாறு பார்ப்போம்.

மாதவிடாய் நிற்கும் காலம் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு இயற்கையாய் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவதோ தாறுமாறாக சுரப்பதோ நிகழ்வது இயற்கையான ஒன்றே. அந்த நேரத்தில் மனநிலையிலும் உடல் நிலையிலும் பலவிதமான அறிகுறிகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக உணர்வு ரீதியாக அந்த நேரத்தில் பெண்கள் எரிச்சல், கோபம், அழுகை, காரணம் இல்லாத சோர்வு, பிடிமானம் இல்லாத நிலை, வெறுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் இது மாதவிடாய் நின்று சில காலங்களில் சரியாகிவிடும் என்றாலும் அந்த நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவியும் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அரவணைப்பும் இந்த பிரச்சனைகளை வெகுவாக குறைக்கும் என்பது உறுதி.

உடலளவில் கை கால் மூட்டு வலிகள்,, தலைவலி முதுகு வலி, பசியின்மை, வயிறு உப்புசம், அதிக மாதவிடாயினால் ஏற்படும் உடல் சோர்வு, இரத்த சோகை போன்ற பல உடல் ரீதியான பிரச்சனைகளும் இந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுகிறது. அவற்றை தகுந்த மருத்துவ ஆலோசனையின் மூலம் மருந்துகளோ, ஊட்டச்சத்து மாத்திரைகளோ கொடுத்து சரி செய்வது நல்லது.

எலும்பு தேய்மானங்கள் 45, 50 வயதுகளில் பெண்களுக்கு பொதுவாக எலும்பு தேய்மானத்தினால் கால் மூட்டு வலி ஏற்படுவது இயற்கையே. தனக்கென உடற்பயிற்சி செய்யாமல் ஊட்டச்சத்தில் கவனம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே ஏற்படுகிறது.

எனவே மருத்துவ பரிசோதனையின் மூலம் எலும்பு மூட்டுகளில் தேய்மானம் இருக்கிறதா, எலும்பின் அடர்த்தி குறைந்து இருக்கிறதா,, உடல் பருமன் இருக்கிறதா ரத்த சர்க்கரை,, ரத்த அழுத்தம் ரத்த கொழுப்பு போன்றவை சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் பரிசோதித்து அதில் பிரச்சனை இருக்குமானால் உடனடியான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது.

எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் கால்சியம் கொண்ட உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியதும் கணவர் மகன் மகள்களின் கடமையாகும்.

பெரும்பாலான பெண்களுக்கு சிறு வயது முதலே மாதவிடாய் ஏற்படுவதினால் ரத்த சோகையும் இருக்கும். அதை பெரும்பாலான பெண்கள் கவனிப்பதில்லை. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற புரதம், உடலுக்கு தேவையான சத்துக்களையும் பிராணவாயுவையும் எடுத்துச் செல்வது.

இது சரியான அளவில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒருவர் பலமாகவும் துடிப்பாகவும் இயங்க முடியும். உதிரப்போக்கு அதிகமாக இருப்பதினால் ஹீமோகுளோபின் அளவு உடலில் குறையலாம். இதுவே ரத்த சோகை. இந்நிலையில் உடலுக்கு தேவையான பிராணவாயுவும் ஊட்டச்சத்துக்களும் இரும்பு சத்தும் சரியான அளவில் செல்களுக்கு போகாத பட்சத்தில் அதீத சோர்வு, மூச்சு வாங்குதல், குறிப்பாக மாடிப்படி ஏறும் போது மூச்சு வாங்குதல், எந்த வேலையும் செய்ய பிடிக்காமை, அஜீரணம், பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதை பெரும்பாலான பெண்கள் கவனிப்பதில்லை. கடமை, வேலைப்பளு போன்ற விஷயத்தினால் இதை உதாசீனப்படுத்தி விடுகின்றனர். நாலாவட்டத்தில் ரத்த சோகை மேலும் பலவித நோய்களுக்கு வழி வகுக்கிறது.

எனவே ரத்த சோகை இருக்கும் பட்சத்தில் பரிசோதனை செய்த பின்பு அவர்களுக்கு சரியான இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகள் சரியான விகிதத்தில் புரதம் போன்றவைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் பொதுவாக பெண்கள் படித்து வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருந்து, பின் திருமணமான பின்பு குழந்தைகளை வளர்க்கும் கடமைக்காக தனக்கென ஒரு தொழில் இல்லாமல் வருமானமும் இல்லாமல் வீட்டை பராமரித்து வருவது இயல்பு.

குழந்தைகளும் தன் எல்லா தேவைகளுக்கும் தாயையே சார்ந்து இருப்பார்கள். பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆகும் பொழுது குழந்தைகள் விடலை பருவத்தில் இருப்பார்கள். அவர்கள் அம்மாவிடம் செலவழிக்கும் நேரம் குறைந்துவிடும். சில குழந்தைகள் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கோ வெளியூர்களுக்கோ சென்று விடுவதும் உண்டு. திருமணம் ஆகி குழந்தைகள் தனியே பிரிந்து சென்று விடுவதும் உண்டு.

இதே காலகட்டத்தில் கணவன்மார்கள் தங்களுடைய தொழில் அல்லது வேலையில் முழு வீச்சில் இயங்கும் சூழல் இருப்பதால் அவர்களும் மனைவியுடன் போதுமான நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்விடுகிறது. அந்த நேரத்தில் பெண்களுக்கு தனக்கென எதுவுமே இல்லையே என்ற வெறுமை உணர்வு தலை தூக்க துவங்கும். இந்த நேரத்தில் மாதவிடாய் கோளாறுகளும் எலும்பு தேய்மானங்களும், இரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடு நோய்களும் சேர்ந்து கொண்டு அவர்களை பாடாய்படுத்தி விடுவதுண்டு.

இந்த நேரத்தில் ஆண் பெண் குழந்தைகள் அம்மாவின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடித்த ஒரு பொழுதுபோக்கு அல்லது வருமானம் ஈட்டக்கூடிய தொழில் அல்லது ஏதேனும் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு போன்ற ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்தி அவர்களின் மனநிலையை பலப்படுத்தி, உடல் நிலையையும் சரிபடுத்தி, தங்களுக்காக தியாகம் செய்த தன் அம்மாவின் நிலையை சரிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

Leave A Reply

Your email address will not be published.