மத்திய கிழக்கில் அமைதி? – சுவிசிலிருந்து சண் தவராஜா

மத்திய கிழக்கில் பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகளில் ஒரு அங்கமாக சிரியா அரபு லீக்கில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. 22 உறுப்பினர்களைக் கொண்ட அரபு லீக்கின் 13 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த முடிவை எடுத்தனர். ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாத போதிலும் குறித்த முடிவை ஆதரிப்பதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதன் பின்னர் யோர்தான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிரியா, சவூதி அரேபியா, எகிப்து, ஈராக் மற்றும் யோர்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர தமது ஆதரவை வெளிப்படுத்தினர். முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சிரிய அதிபர் பசார் அசாத் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்திய இந்த நாடுகள் சிரியாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தன.

‘அரபு வசந்தத்தின்’ நீட்சியாக 2011இல் சிரியாவில் ஆரம்பமான அரசுக்கு எதிரான ஆர்ப்பட்டங்கள் உள்நாட்டுப் போராக மாறியதை அடுத்து அரபு லீக்கில் இருந்து சிரியா வெளியேற்றப்பட்டது. அரச எதிர்ப்பு ஆர்;ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து உருவான தீவிரவாதிகள் அசாத் தலைமையிலான ஆட்சியை அகற்றும் நோக்குடன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போதில் பிராந்திய வல்லரசுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் போன்ற நாடுகளும் உலக நாட்டாமையான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பெருமளவு ஆயுத தளபாடங்களையும் பெருந்தொகை நிதியையும் தீவிரவாதிகளுக்கு வழங்கியது மட்டுமன்றி அவர்களுக்குத் தேவையான படைத்துறைப் பயிற்சிகளையும் வழங்கின. ஒரு கட்டத்தில் சிரியாவின் பெரும்பாலான பகுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.

சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கிய பகுதிகளில் வலுவாக இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் நிலவிய ஸ்திரமின்மையைப் பயன்படுத்திக் கொண்டு தமது நடவடிக்கைகளை சிரியாவிலும் விரிவுபடுத்தினர். ஒரு கட்டத்தில் சிரியாவின் பெரும் நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அவர்கள் ஒரு அகண்ட இராச்சியத்தைப் பிரகடனம் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்கில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு படிப்படியாகத் தனது கால்களை சிரியாவில் பதித்துக் கொண்டது. எண்ணைவளம் மிக்க பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கப் படைகள் அங்கிருந்து கள்ளத்தனமாக பெற்றோலிய ஏற்றுமதியை ஊக்குவித்து வருகின்றன.

அதேவேளை, இந்தப் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குர்திஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக எல்லை தாண்டிய படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் துருக்கி தனது சார்பிலும் தீவிரவாதக் குழுவொன்றை அமைத்துச் செயற்பட்டு வருகின்றது.

தனக்கு எதிரான பலமுனைத் தாக்குதல்களைச் சமாளிக்க வழிதெரியாமல் தவித்த அதிபர் அசாத், தனது நேச நாடுகளான ரஸ்யா மற்றும் ஈரானிடம் படை உதவிகளைப் பெற்று நிலைமையை ஓரளவு சமாளித்து தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே, சிரியாவின் நிலப்பரப்பான கோலான் குன்றுகளை அடாத்தாகக் கைப்பற்றி வைத்துள்ள அயல்நாடான இஸ்ரேல் ஈரான் படையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சிரியா மீது அடிக்கடி விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

தனிமைப்படுத்துதல், தண்டித்தல் என்ற அணுகுமுறையையே எப்போதும் பின்பற்றிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சிரிய விவகாரத்திலும் தனது வழக்கமான பாணியையே பின்பற்றியது மட்டுமன்றி பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளையும் தனது வழியையே அடியொற்றச் செயற்பட ஊக்குவித்தது.

ஆனால், அண்மைக் காலத்தில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்க இராஜதந்திரம் வலுவிழந்து சீனா மற்றும் ரஸ்யா ஆகிய அமெரிக்க எதிர்முகாமில் உள்ள நாடுகளின் இராஜதந்திரம் ஓங்கி வருவதைப் பார்க்க முடிகின்றது. இத்தகைய பின்னணியில் எதிரி நாடுகளாக விளங்கிய சவூதி அரேபியாவும் ஈரானும் சீனாவின் முன்முயற்சியில் நட்பை வளர்த்துக் கொண்டு உறவுகளைச் சீர்செய்துவரும் நிலையில் சிரியா மீண்டும் அரபு லீக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது. இது சீன இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும், அமெரிக்க இராஜதந்திரத்தின் தோல்வியாகவும் பார்க்கப்படுகின்றது.

அரபு லீக்கில் சிரியா மீளவும் இணைத்துக் கொள்ளப்பட்ட செய்தி தொடர்பில் ரஸ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள அதேவேளை அமெரிக்கா தனது கவலையைப் பதிவு செய்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதே. அதேவேளை, அசாத் எதிர்ப்பாளர்களும் இந்த அறிவிப்பு தொடர்பில் தமது கவலையைப் பதிவு செய்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை அரபு லீக்கில் சிரியா இணைத்துக் கொள்ளப்பட்டதன் ஊடாக கடந்த 12 ஆண்டுகளில் சிரியாவில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான தனது பொறுப்புக் கூறலில் இருந்து அசாத் தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளதாக அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

12 வருட சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக சற்றொப்ப ஐந்து இலட்சம் மக்கள் தமது உயிர்களைப் பறிகொடுத்து உள்ளனர். 25 இலட்சம் பேர் வரையானோர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து அகதிகளாக உள்ளனர். போர் காரணமாக முழு நாடுமே பாதிக்கப்பட்டு உள்ளது. உயிர் இழப்பு, பொருள் இழப்பு மாத்திரமன்றி நாட்டின் முழு உட்கட்டுமானமும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. தற்போதைய அறிவித்தல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சற்று ஆறுதலான செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏற்கனவே போரில் வெற்றிபெற்று தனது நிலையை உறுப்படுத்திக் கொண்டுள்ள அசாத், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் பெருளாதார, சமூக மேம்பாட்டுக்கு உழைப்பார் என நம்பலாம்.

அரபு லீக்கில் சிரியா இணைத்துக் கொள்ளப்பட்ட விவகாரத்தில் பின்னணி இராஜதந்திரம் ஏதும் இருக்கக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. தனது தலையிடாக் கொள்கையில் இருந்து சற்று விலகிக் கொண்டுள்ள சீனா, தற்போது உலக விவகாரங்களில் தனது இராஜதந்திரச் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருவதைப் பார்க்க முடிகின்றது. உக்ரைன் போருக்கு முடிவுகாணும் விதமாகச் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத் திட்டம், நீண்டநாள் எதிரிகளான சவூதி அரேபியாவையும் ஈரானையும் சமாதானப்படுத்தியமை, யேமன் உள்நாட்டுப் போரில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பித்து வைத்தமை என பன்னாட்டு விவகாரங்களில் சீனா ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. இந்நிலையில், சிரியா அரபு லீக்கில் இணைத்துக்கொள்ளப்பட்ட விடயத்திலும் சீனாவின் இராஜதந்திரம் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல. நீண்டகாலமாக அமைதியை இழந்து நிற்கும் மத்திய கிழக்கில் ஓரளவேனும் அமைதி திரும்பினால் நல்லதே. அதுவே இன்றைய தேவையும் கூட.

Leave A Reply

Your email address will not be published.