தினேஷ் ஷாப்டரின் தாயாரின் மரபணு நீதிமன்றால் கோரல்!

ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு கோரப்பட்டுள்ளது.

தாயாரின் இரத்த மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவரது தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

5 மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சட்ட வைத்திய சபையின் பரிந்துரையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய வழங்கிய உத்தரவின் பிரகாரம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

சடலம் தோண்டப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய தலைமையில் அவ்விடத்திலேயே வழக்கு ஒன்றும் இடம்பெற்றதுடன், வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.