ரஷிய எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புதின் உத்தரவு.

உக்ரைன மீது ரஷிய படைகள் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. ரஷியா வீசும் ஏவுகணை மற்றும் டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி வருகிறது.

மேலும் ரஷிய எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. நேற்று மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது.

இந்த நிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷியாவின் எல்லை காவலர் தின வாழ்த்து செய்தியில் புதின் கூறும் போது, ரஷிய கூட்டமைப் பின் புதிய குடிமக்களுக்கு அனுப்பப்படும் உணவு, மனிதாபமான உதவி, கட்டுமானப் பொருட்கள் உள்பட ராணுவ மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் சரக்குகளின் விரைவான இயக்கத்தை உறுதி செய்வது அவசியம்.

அந்த எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார். உக்ரைனின் கெர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய நான்கு பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் புதின் அறிவித்தார்.

இதற்கிடையே உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது. இந்த நிலையில்தான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷிய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.