கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து : மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படை

சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் இப்போது இந்திய விமானப் படை களமிறங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் இருக்கும் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வழக்கம் போலப் புறப்பட்டது. இந்த கோரமண்டல் ரயில் ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.

இந்த ரயில் வழக்கம் போல இன்று கிளம்பி வந்து கொண்டிருந்த நிலையில், ரயில் பாலசோர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த கோர விபத்தில் சுமார் 10 ரயில் பெட்டிகள் தடம் புறப்டுள்ளது. இவை அனைத்தும் ஏசி பெட்டிகளாகும். இந்த தடம் புரண்ட ரயில்கள் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்த நிலையில், ஹவுரா பெங்களூர் விரைவு ரயிலும் அதில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், லூப் டிராக்கில் உள்ள மற்றொரு சரக்கு ரயிலும் அதில் மோதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த விபத்து நடைபெற்று 5 மணி நேரம் ஆகும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்த நிலையில், அவர்கள் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வந்தனர். இருப்பினும், இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இப்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகளில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் இணைந்துள்ளனர். ரயில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டும் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தேசிய பேரிடர் மீட்பு படையும் ஏர்போர்ஸும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அவர்களுடன் இப்போது இந்திய விமானப் படையும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை விரைந்து மீட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில், “ஒடிசாவில் விபத்து நடந்த இடத்திற்கு விரைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.. மேலும் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் இருந்து மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில மீட்புப் படையினருடன், விமானப்படை வீரர்களும் இறக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது”

Leave A Reply

Your email address will not be published.