132 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி…!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிசாங்கா 43 ரன்னிலும், கருணாரத்னே 52 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்னும், சதீரா சமரவிக்ரமா 44 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து அசலங்கா 6 ரன், ஷனகா 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. இதையடுத்து 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 2 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து இப்ராகிம் ஜட்ரானுடன் ரஹ்மத் ஷா ஜோடி சேர்ந்தார். இதில் ரஹ்மத் ஷா 36 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாகிடி, ஜட்ரான் இணை நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஜட்ரான் 54 ரன்னிலும் , ஷாகிடி 57 ரன்னிலும் வீழ்ந்தனர். அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.